லேபிள்கள்

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

டாக்டர் ஆஃப் ஆட்டமோபைல் எஞ்சினியரிங் Vs பள்ளிக்கூடமே போகாத மெக்கானிக்

 


நீ எந்த கிளாஸ் படிக்கறே?” என்றார் அந்த மனிதர் சிறுவனிடம்.

“செகண்ட் ஸ்டாண்டர்ட்... நீங்க?”

“நான் படிச்சி முடிச்சிட்டேன்”

“எந்த கிளாஸ் வரைக்கும் படிச்சீங்க?”

“பி.ஹெச்.டி”

“அது செக்கண்ட் ஸ்டாண்டார்டை விட பெருசா?”

அந்த மனிதர் சிரித்தார்.

“ஏய்.. அப்படியெல்லாம் கேட்கக் கூடாது” என்று அதட்டினார் பையனின் அப்பா.

“இட்ஸ் ஓக்கே. ஈஸி” என்றார் அந்த மனிதர்.

சென்னையிலிருந்து மதுரை போகிற அந்த பஸ் ஏதோ ஒரு ஹோட்டல் வாசலில் சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. மணி ராத்திரி இரண்டு. அந்நேரத்திலும் மசால் தோசை, பரோட்டா, சப்பாத்தி என்று ஐட்டங்கள் இருந்தது மாத்திரம் இல்லை, சாப்பிடவும் பயணிகள் இருந்தார்கள்.

“நீங்க எதுல டாக்டரேட்?” என்றார் சிறுவனின் அப்பா.

“ஆட்டமோபைல் எஞ்சினியரிங் ” என்றார் அந்த மனிதர்.

“ஆட்டமோபைல் எஞ்சினியரிங்ன்னா என்ன?” என்றான் சிறுவன்.

“ம்ம்.. அதெல்லாம் உனக்குப் புரியாது” மறுபடி அதட்டினார் அப்பா.

“நோ.. நோ.. நோ.. இதான் நாம பண்ற மிஸ்டேக். நெவர் டிஸ்கரேஜ் சில்ரன் வென் தே ஆஸ்க் கொஸ்ஸன்ஸ்” என்றார் பி. எச். டி. தொடர்ந்து,

“நாம வந்தோமே பஸ்ஸு, அதுவும் ஒரு ஆட்டமோபைல். அது எப்படி வேலை செய்யுது தெரியுமா?” என்றார் சிறுவனிடம்.

“ம்ம்ஹூம்”

“அதையெல்லாம் படிக்கிறதுதான் நான் படிச்ச கிளாஸ்”

“எப்படி வேலை செய்யுதுன்னு சொல்லுங்க?”

இப்போது அந்தச் சிறுவனை மடியில் அமர்த்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். ஆட்டோ சைக்கிள், டீஸல் சைக்கிள், டூ ஸ்ட்ரோக், ஃபோர் ஸ்ட்ரோக், ஸ்பார்க் இக்னிஷன், கம்ப்ரஷன் இக்னிஷன், ஸ்பீட், டார்க் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். பையனும் கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியில்,

“உங்களுக்கு பஸ் பத்தி எல்லாமே தெரியுமா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்” என்றார் சிரிப்புடன்.

எல்லாரும் சாப்பிட்டு முடித்து வண்டியில் ஏறினார்கள். டிரைவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார், அது ஸ்டார்ட் ஆகவில்லை. டிரைவரும் கண்டக்டரும் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள்.

“விழுப்புரம் டெப்போலேருந்து ஆள் வரணும்ன்னா மூணு ஹவர் ஆயிரும்”

“இப்ப என்ன பண்றது?”

“லோக்கல் மெக்கானிக் யாரையாவது கூப்பிடு”..

“மணி ராத்திரி ரெண்டே கால்”

“பின்னே வெய்ட்டுதான் பண்ணணும்”

இப்போது சிறுவன் கண்டக்டரிடம் போய், “இந்த அங்கிளுக்கு பஸ் பத்தி எல்லாமே தெரியும்” என்று சிபாரிசு செய்தான்.

கண்டக்டர் ஆச்சரியமாய், “சார் நீங்க மெக்கானிக்கா?” என்று கேட்க அவர், “ஐ ஆம் டாக்டர் ஆஃப் ஆட்டமோபைல் எஞ்சினியரிங் ” என்றார்.

“ஓ.. டாக்டரா.... சாரி சார்”

சிறுவனுக்கு ஏமாற்றம்.

“அங்க்கிள் பஸ் ஏன் ஸ்டார்ட் ஆகல்லைன்னு சொல்லுங்க” என்றான்.

“சும்மா இரு விக்கி” அதட்டினார் அப்பா.

அதற்குள் டிரைவர் ஆட்டோ மெக்கானிக் கடை வாசலில் தூங்கிக் கொண்டிருந்த அழுக்குப் பையன் ஒருத்தனை அழைத்து வந்து விட்டார். பஸ்ஸின் மூஞ்சியில் இருந்த ஜன்னலைக் கழட்டி வைத்துவிட்டு, “ஸ்டார்ட் பண்ணுங்கண்ணே” என்றான் அந்த அழுக்கு பையன். சின்ன வால்வு மாதிரி இருந்த எதையோ சொடக்கு சொடக்கு சொடக்கு என்று பம்ப் அடித்தான். ம்ம்.. ம்ம்.. ம்ம்.... என்று உறுமி சட்டென்று ஸ்டார்ட் ஆயிற்று.

"டிரைவரண்ணே இனிமே எங்கியும் வண்டியை ஆஃப் பண்ணாதீங்க” என்றான். டிரைவர் கொடுத்த ஐம்பது ரூபாயை சந்தோஷமாய் வாங்கிக் கொண்டான்.

சிறுவனுக்கு ஆச்சரியம்.

அந்த அழுக்குப் பையனிடம் போய், “நீயும் பி.எச்.டி படிச்சிருக்கியா?” என்றான்.

“அப்படீன்னா?” என்றான் அழுக்கு புரியாமல்.

“உனக்கு ஆட்டோ சைக்கிள், டீஸல் சைக்கிள் எல்லாம் தெரியுமா?”

“எனக்கு பெடல் பண்ற சைக்கிள் மட்டும்தான் தெரியும்”

“ஸ்பீடுக்கும் டார்க்குக்கும் இருக்கிற ரிலேஷன்?”

“எனக்கு ரிலேஷன்ஸ் யாருமில்லை”

“பஸ் பத்தி காலேஜ்ல படிச்சியா?”

“நா பள்ளிக்கூடமே போனதில்லை கண்ணா”

சிறுவன் கொஞ்ச நேரம் யோசித்தான். பிறகு சிரித்துக் கொண்டே ‘புரியுது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பிறகு வந்து சீட்டில் உட்கார்ந்து விட்டான். பி.எச்.டி க்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.

“என்ன புரிஞ்சது?” என்று அவனிடம் கேட்டார்.

“படிச்சவங்களுக்கு நிறைய சம்பளம் வருது. ஆனா அவங்களுக்கு தெரியாத விஷயங்கள் படிக்காதவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா சம்பளம் இல்லை. சம்பளம் படிப்புக்குத்தான். தெரிஞ்சதுக்கோ, தெரியாததுக்கோ இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...