லேபிள்கள்

திங்கள், 2 பிப்ரவரி, 2026

மருத்துவர் தொட்டுப்பார்க்காத சிகிச்சை

 


மருத்துவர் தொட்டுப்பார்க்காத சிகிச்சை

பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் செய்திகளைத் தவிர வேறு நிகழ்வுகளை பார்க்க தோன்றாது. கடந்த ஞாயிறில் வெளியே போய் வீடு திரும்பும் நேரத்தில் விஜய் டீவியில் நீயா நானா நிகழ்வு.

வெள்ளைச் சட்டை போட்ட மருத்துவர் ஒருவர் நிதானமாய் பேசிக்கொண்டிருந்தார் அந்த நிதானமே அவர் பேசுவதை நின்று கேட்கத் தோன்றியது. 

நிமிடத்துக்கும் குறைவான அவரின் பேச்சில் கண்கலங்கிவிட்டது தொடர்ந்து நிகழ்வை பார்த்தேன்.

சாமானிய வீட்டில் பிறந்து மருத்துவரானதாக சொல்லும் அவர் சொன்ன இன்னொரு வார்த்தையால் அழுது விட்டேன். 

சமீபங்களில் மருத்துவர்கள் நோயாளிகளை கை பிடித்தோ தோட்டோ பார்ப்பது குறைவு அல்லது இல்லை இதை அந்த மருத்துவருக்கு அவரின் அப்பா சொன்னதாகவும் அதை அவர் கடைப்பிடிப்பதாகவும் சொன்னார்.

நான் மாதக்கணக்கில் மருத்துவமனையி்ல் இருந்தவன். பல நோயாளிகளோடு மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன் நோயாளிகளோ அவரின் குடும்பத்தாரோ விரும்புவது மருந்து, மருத்துவ முறைகளைப் பற்றியோ மருத்துவர்களை பற்றியோ அல்ல தொட்டு பார்த்து நோய் கண்டறிந்து ஆறுதலாய் பேசுவதை மட்டுமே.

புற்றுநோய் உறுதிச்செய்யப்பட்ட அப்பாவை ஈரோட்டில் பெரிய, பிரபலமான மருத்துவமனையில் சேர்த்தோம் அதிநவீன கருவிகள் சிகிச்சைமுறைகள் என்று இருந்த அந்த  மருத்துவமனையில் நான்காவது நாளிலே சிகிச்சை செய்துக்கொள்ள விருப்பமில்லை வீட்டிற்க்கு போகலாம் என்று சொல்லிவிட்டார் இத்தனைக்கும் முதல்கட்ட சோதனைகளுக்கே இலட்சங்களில் பனம் கட்டி இருந்தோம். நாங்கள் வீடு திரும்புதாய் சொன்னதும் மருத்துவமனை நிர்வாகம், எங்கள் குடும்பமென அப்பாவுடன் பல மணிநேரம் பேசினோம் அவர் அங்கு சிகிச்சைக்கு  ஒத்துழைக்கவில்லை கடைசியில் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வந்து பேசினார் அவரிடம் அப்பா கேட்ட கேள்விக்கு தலைமை மருத்துவரிடம் பதில் இல்லை

அப்பா கேட்ட கேள்வி இதுதான்... "நான் வந்ததிலிருந்து இந்த மருத்தவமனையின் எந்த மருத்துவரும் என்னை தொட்டுக்கூட பார்க்கவில்லை எனக்கிருக்கும் பிரச்சனை என்னை தொட்டுப் பார்த்தால்தான் அறிய முடியும், எனக்கிருக்கும் நோய் தொட்டால் பரவும் நோயுமல்ல ஆனாலும் ஒரு மருத்துவரும் என்னை தொட்டுச் சோதனைச் செய்யவோ சிகிச்சை செய்யவோ இல்லை இப்படி இருக்கும் உங்களால் எப்படி என்னை குணமாக்க முடியும்? என்பதுதான்... அந்த மருத்துவமனையை விட பற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சைமுறைகள் இல்லை என்ற நிலையில் பலவாறாக சமாதானப்படுத்தி அங்கேயே சிகிச்சை எடுக்க சம்மதிக்க வைத்தோம் ஆனாலும் அந்த மருத்துவமனையில் எந்திரங்களை நம்பிய அளவில்கூட மனிதர்களை அவர் நம்பவில்லை கடைசியாய் புற்றுநோய் அப்பாவை தின்று செரித்தது.

அப்பா மறைந்ததிலிருந்து சமகால மருத்துவர்கள் யாரை கண்டாலும் அவர் நோயாளியை தொட்டு சிகிச்சை செய்கிறாரா என்று கவனிக்கிறேன் பெரும்பாலும் இல்லை.

இப்படியான எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில்தான் வெள்ளைச்சட்டை மருத்துவரை பார்த்தேன். நிகழ்ச்சியின் முடிவில் சிறப்புப் பரிசை அவருக்கு கொடுக்கும்போது அவரின் பெயர் குமரேசன் என்று தெரிந்தது.

யாரையும் அவ்வளவு சீக்கிரமாய் பராட்ட நினைக்காத எனக்கு இந்த மனிதரை கொண்டாடத் தோன்றியது கவனித்து பார்த்ததில் அவரின் சட்டைப்பையில் HERO பேனா வைத்திருந்தார் அது அவரைப்போலவே தங்கமாய் மின்னியது

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths