கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்திகள்: உலகமே தற்போது எதைப் பற்றி அதிகம் பேசுகிறதென்றால், அது கச்சா எண்ணெய் தான். 'கருப்பு தங்கம்' என்று அழைக்கப்படும் இந்த கச்சா எண்ணெய் (Crude
Oil, பார்ப்பதற்கு கருப்பாக, அடர்த்தியாக மற்றும் பிசுபிசுப்பாக ஒரு கறுப்பு நிற சேறு போல இருக்கலாம். இந்தத் திரவம் தான் இன்று உலகத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறது. பூமியில் இருந்து எடுக்கப்படும் இந்த 'கருப்பு தங்கம்' அப்படியே பயன்பாட்டுக்கு வருவதில்லை. அதை எப்படி நாம் பயன்படுத்தும் பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றுகிறார்கள்?, கச்சா எண்ணெயிலிருந்து என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன என்பதைப் பார்த்தால், நிஜமாகவே நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
கச்சா எண்ணெய் என்றால் என்ன?
கச்சா எண்ணெய் என்பது பல நூறு ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளின் கலவை. இயற்கையாகவே கச்சா எண்ணெயில் கனமான மூலக்கூறுகள் தான் அதிகம் இருக்கும். சுத்திகரிப்பு நிலையங்களில் முதலில் இதை ஒரு ராட்சத அடுப்பில் 350°C -
400°C வெப்பநிலைக்கு சூடாக்குவார்கள்.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முறை
சூடான எண்ணெய் 'டிஸ்டிலேஷன் டவர்'
(Distillation Tower) எனப்படும் ஒரு உயரமாக இருக்கும் டவருக்குள் செலுத்தப்படும். அந்த ஆவி மேலே செல்லச் செல்ல, அதன் வெப்பநிலை குறையும். பின்னர் வெப்பநிலைக்கு ஏற்ப எண்ணெய் வெவ்வேறு அடுக்குகளாகப் பிரிகிறது. லேசான மூலக்கூறுகள் (பெட்ரோல், கேஸ்) கோபுரத்தின் உச்சிக்குச் சென்று திரவமாகும். கனமானவை (டீசல், தார்) கீழேயே தங்கிவிடும்.
கச்சா எண்ணெய் மூலக்கூறுகள்
கச்சா எண்ணெயில் மூலக்கூறுகள் கனமான இருப்பதால், அதை லேசான எரிபொருட்களாக மாற்றம் வேண்டும். ஏனென்றால் பெட்ரோல் போன்ற லேசான எரிபொருட்கள் தான் அதிகம் தேவையாக உள்ளது. இங்கேதான் உடைத்தல்
(Cracking_ என்ற வித்தை நடக்கிறது. பெரிய மூலக்கூறுகளை அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் கொடுத்து சிறிய மூலக்கூறுகளாக 'உடைப்பார்கள்'. இதன் மூலம் நமக்குக் கூடுதல் பெட்ரோல் கிடைக்கிறது.
சில நேரங்களில் கிடைக்கும் எரிபொருள் தரமானதாக இருக்காது. என்ஜினுக்குள் செல்லும் போது அது சரியாக எரியாமல் 'நொக்கிங்'
(Knocking) சத்தத்தை உருவாக்கும். இதைத் தவிர்க்க, மூலக்கூறுகளின் வடிவத்தை மாற்றி அதன் Octane
Rating-ஐ உயர்த்துவார்கள். இது உங்கள் கார் என்ஜினைப் பாதுகாப்பாக ஓட வைக்கிறது.
எண்ணெயில் இயற்கையாகவே கந்தகம் (Sulfur)
கலந்திருக்கும். இது அப்படியே எரிந்தால் சுற்றுச்சூழல் மாசுபடும். அதனால் ஹைட்ரஜனைப் பயன்படுத்தி அந்தச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 'Ultra-low
sulfur' எரிபொருளாக மாற்றப்படுகிறது.
இந்தியா ஏன் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்கிறது?
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% க்கும் மேல் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. நம்மிடம் ராஜஸ்தான்
(Barmer), குஜராத் மற்றும் மும்பை கடல் பகுதிகளில் (Bombay High) எண்ணெய் கிணறுகள் இருந்தாலும், நமது அசுர வேக வளர்ச்சிக்கு அது போதுமானதாக இல்லை.
கச்சா எண்ணெயில்
இருந்து
கிடைக்கும் பொருட்கள் என்னென்ன?
சமையல் எரிவாயு (LPG)
சூடான கச்சா எண்ணெய் டவரின் மிக உயர்ந்த பகுதியில் மிக லேசான வாயுக்கள் வெளியேறுகின்றன. இவைதான் நாம் வீட்டில் சமைக்கப் பயன்படுத்தும் சிலிண்டர் கேஸ் (LPG) ஆகும்.
பெட்ரோல்
(Gasoline)
வாயுக்களுக்கு அடுத்தபடியாக பெட்ரோல்
(Gasoline) கிடைக்கிறது. கார், பைக் மற்றும் சிறிய வாகனங்களை இயக்க இதுவே பிரதான எரிபொருள்.
கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் நாப்தா
(Naphtha)
பெட்ரோலுக்கு அடுத்துக் கிடைக்கும் இந்த நாப்தா
(Naphtha) திரவம் மிகவும் முக்கியமானது. இதிலிருந்துதான் பிளாஸ்டிக் பொருட்கள், பெயிண்ட் மற்றும் பல்வேறு ரசாயனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மண்ணெண்ணெய் & விமான எரிபொருள்
கச்சா எண்ணெய் டவரின் சற்று கீழே மண்ணெண்ணெய்
(Kerosene) கிடைக்கிறது. மேலும் வானத்தில் பறக்கும் விமானங்களுக்குத் தேவையான உயர்தர 'ஏர்கிராப்ட் டர்பைன் ஃபியூயல்' (ATF) இங்கிருந்தே எடுக்கப்படுகிறது.
டீசல் & லூப்ரிகேஷன் ஆயில்
கனரக வாகனங்களான லாரி, பஸ் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்களை இயக்க டீசல் பயன்படுகிறது. அத்துடன் இயந்திரங்கள் தேய்மானமின்றி ஓட உதவும் 'லூப்ரிகேஷன் ஆயில்' (கிரீஸ் போன்றவை) இந்த அடுக்கில் கிடைக்கிறது.
தார் எப்படி கிடைக்கிறது?
டவரின் கடைசி அடியில் எஞ்சியிருப்பது தார். சுத்திகரிப்பு முடிந்ததும் கடைசியாக மிஞ்சும் அந்த அடர்த்தியான கழிவு தான் நாம் சாலை போடப் பயன்படுத்தும் தார்
(Asphalt). அதாவது கச்சா எண்ணெயில் ஒரு சொட்டு கூட வீணாவதில்லை.
பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
நம்ம ஊரில் பெட்ரோல் விலை ஏறுவதற்குப் பின்னால் ஒரு பெரிய கணக்கு இருக்கிறது. அதாவது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் (Brent
Crude) என்ன விலைக்கு விற்கிறது என்பது முதல் காரணி. அடுத்து எண்ணெயைப் பிரித்தெடுக்க ஆகும் செலவு.
மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள். அதாவது கலால் வரி (Excise
Duty) மற்றும் வாட் வரி (VAT) தான் விலையில் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கின்றன. அதேபோல நாம் டாலரில் பணம் செலுத்துவதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது பெட்ரோல் விலை உயரும்.
கச்சா எண்ணெய் எதிர்காலத் திட்டம்: இந்தியா எடுக்கும் சில அதிரடி முடிவுகள்
கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை (Ethanol
Blending) பெட்ரோலுடன் 20% வரை கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இறக்குமதிச் செலவைக் குறைக்கும். பெட்ரோல் தேவையைத் தவிர்க்க மின்சார வாகனங்களுக்கு (EV) அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்க்கு மாற்றாக 'Green
Hydrogen' தொழில்நுட்பத்தில் இந்தியா அதிக முதலீடு செய்து வருகிறது.
கச்சா எண்ணெயின் அவசியம்
உண்மையைச் சொல்லப்போனால், கச்சா எண்ணெய் இல்லை என்றால் நவீன உலகம் இயங்குவது சாத்தியமே இல்லை. அதனால்தான் இதை பூமியின் 'உண்மையான புதையல்' என்று அழைக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக