லேபிள்கள்

புதன், 2 ஜூலை, 2025

எல்லாவற்றிற்கும் அவரவரின் செயல்களும் முயற்சிகளுமே காரணம்

 



"சார்,விடாப்பிடி அரசியல் பேசுபவர்களை அடுத்து நமக்கு  அலர்ஜி, அதீத ஆன்மீக கோஷ்டிங்கதான்

கடவுள் காப்பாத்துவார்னு தேவைப்படற சமயங்கள்ல மட்டும் நினைச்சி வழிபட்டு  வாழறவங்க ஒரு ரகம். 

எல்லாத்துக்குமே கடவுள் தான் காரணம். அவனன்றி ஒரு அணுவும் அசையாதுன்னு 24 மணி நேரமும் கடவுளே கதின்னு கிடக்கிறவங்க இன்னொரு ரகம்.

இந்த இரண்டாவது ரகத்தினர் அதீத நம்பிக்கையை அவர்களோடு வச்சுக்காம மத்தவங்க மேலயும் திணிக்கிறதுதான் பிரச்சனை.

ரோதனை தாங்காமல், ஏதாவது கேள்வி கேட்டால் உடனே கடவுள் நம்பிக்கையே பழிக்கிறீங்களான்னு பாயறாங்க.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெரிய ஆன்மீகவாதிகிட்ட நேரடியா ஒரு கேள்வி கேட்டு லைட்டா மனஸ்தாபமே வந்துடுச்சி சார்.. 

15 வருஷமா குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு புருஷன் பொண்டாட்டி. 

குழந்தை பாக்கியத்திற்காக எத்தனை கோயில்களை சுற்ற முடியுமோ, எவ்வளவு பரிகார சடங்குகளை செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்கிறார்கள். 

செயற்கை முறை  கருத்தரிப்பு வேண்டாம்னும்  தவிர்த்துடுறாங்க.

கடவுள் எப்படியும் தன் வம்சத்தை விருத்தி செய்து விடுவார் என்று கணவர் நம்புகிறார். 

மனைவியும் ஒரு நாள் திடீரென கர்ப்பம் தரிக்கிறார்.

கடவுளால்தான் எல்லாமே என்று பக்தி பெருக்கில் திளைக்கும் அந்த கணவர், இப்போது கடவுளின் வரத்தால்தான் குழந்தை வாய்த்திருக்கிறது என்று அப்படியே நம்புவாரா?

இது கொச்சையான எடக்கு மடக்கான கேள்வியாக இருக்கலாம். ஆனால் நடைமுறை உண்மை என்று ஒன்று இருக்கிறது.

கடவுள் கைவிடவே மாட்டார் என்பது நம்பிக்கையாக இருக்கலாம். அதில் தவறு ஏதுமில்லை.

ஆனால் அவரவர்க்கு நடக்கும்  எல்லாவற்றிற்கும் அவரவரின் செயல்களும் முயற்சிகளுமே  காரணம்ன்றதுதான் நம்ம கோட்பாடு.

பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது தவறாம ஒரு  வைபவம் நடக்கும் .

மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியரை பேட்டி கேட்டால், என் வெற்றிக்கு என் வகுப்பு ஆசிரியர் என் தலைமையாசிரியர்தான் காரணம்  என உணர்ச்சிகரமாக அடுக்கிக் கொண்டே போவார்கள்.

அதே வகுப்பாசிரியரும் பள்ளி தலைமை ஆசிரியரும்தான் மற்ற மாணவ மாணவியருக்கும் பாடம் நடத்தினார்கள். ஏன் அவர்களால் மாநில அளவில் தேர்ச்சி பெற முடியவில்லை.

ஆசிரியர்கள் செய்வது உதவி. சாதனை நிலைக்கு கொண்டு போவது மாணவர்களின் சொந்த முயற்சி. 

ஒரு ரயில் விபத்தில் தன்னை கடவுள் காப்பாற்றினார் என்று ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதேவிபத்தில் பல பேர் பலியாகியிருப்பார்கள். அவர்களை கொன்றது யார்? 

அவர்கள் பலியானது விதி என்று சொல்லலாம். அதே விதி தானே உயிர்களையும்  காப்பாற்றி இருக்கும்?  

மறுபடியும் சொல்றோம் கடவுள் நம்பிக்கையை பழிப்பதில்லை. கோவில்கள் மட்டும் இல்லையென்றால் பல பேருக்கு பைத்தியமே பிடிக்கும். 

ஏன்னா வாழ்க்கையில் பல விஷயங்களில் பல பேரை நம்பி மோசம் போனவர்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருப்பது  கோவில்கள்தான். 

எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களது வழிபாட்டுத் தலங்கள்தான் கடைசி புகலிடம்.

நம்புங்க ஆனா அதுவே கெதின்னு கிடக்காதீங்க அவ்வளவுதான் சார்"

இந்த நேரத்தில் ஒரு 'கீதா' கிராஸ் ஆனதால தத்துவமாவது வெங்காயமாவதுன்னு அத்தோட நிறுத்திட்டோம். 



நடை பயிற்சி டைரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...