மலர்களுக்குள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் (Angiosperms)
Flower Structure!
பரிணாமம் எப்பொழுதும் எனக்கு ஒரு வியப்பூட்டும் நந்தவனம்.
அது விசயங்களை குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டவென மறைத்து வைத்திருக்கும் சாக்லேட் பார்களை போலவே பல வாழ்க்கை சூத்திரங்களை மறைத்து வைத்திருக்கிறது.
அவதானிக்கும் தருணம் தோறும் என்னுடைய அனுபவ எல்லைக்களுக்கு ஏற்ப பெரிய சிறகுகளைப் சிறுகச் சிறுக கொடுத்து விரிவடைய வைத்துக் கொண்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு மலர்களின் அமைப்பை பற்றி படித்துக் கொண்டிருந்தேன்.
மலர்களின் இதழ்களை கடந்து சென்ற எனக்கு பெரும் ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது அப்பொழுது விளங்கவில்லை. சற்று மென்மேலும் தவழ்ந்து அறிந்து கொண்டிருக்கும் பொழுது, மலர்களின் உள்ளே நடு நயமாக பெரிய வயிற்றுடன் அமைந்துப்பட்டிருந்த பெண் இனப்பெருக்க உறுப்பான சூல்வித்தினைச் (carpel) சுற்றிலும் அரண்களாக எழுந்து அழகூட்டிக் கொண்டிருந்த ஆண் இனப்பெருக்க உறுப்பான பல ஸ்டெமென்களை (stamen) பார்க்கும் பொழுது என்னுடைய சிந்தனை சிறகு நின்று நிதானித்து விரியத் தொடங்கியது.
இந்த அமைப்பிற்கும் மனித ஆண்/பெண் தேடல் சார்ந்த ஈர்ப்பிற்கும், மரபணு கொண்டு சேர்ப்பிற்கான பரிணாம விளையாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடுமா என்று சிந்திக்க தோன்றியது. அதன் விளைவு இந்த பதிவு. என்னுடைய கோணங்கி சிந்தனை எப்படியாக இந்த மலரின் இனப்பெருக்க தேர்ந்தாய்வை நம்முடன் தொடர்பு படுத்திக் கொண்டது என்பதற்கு முன்பாக முதலில் ஒரு மலரின் அமைப்பிற்குள் சென்று வந்துவிடுவோம்.
நம்மால் மலர்களே இல்லாத ஒரு உலகையோ அல்லது சினிமாப் பாடல்களையோ நினைத்தும் பார்க்க முடியுமா? அந்த உலகுதான் எத்தனை நிறமிழந்து, வாழ்க்கையற்று சாம்பல் நிறமாக இருக்கும். மலர்கள் அழகிற்கெல்லாம் அழகு சேர்க்கும் ஒரு ரோஜா வனம். கண்களுக்கு முன்னால் அலைகள் வடிவில் விரிந்து கிடக்கும் மலைகளின் சரிவிலும், எழுச்சியிலும் வண்ண வண்ண மலர்களால் நிறைந்திருந்தால் மனம் ஒரு செளந்தர்யத்தின் ஒரு வண்டாக எழுந்து அத்தனை மலர்களையும் ஒரு பறவை பார்வையில் பார்க்க சிடுசிடுத்துக் கொண்டிருக்கும். அத்தனை அழகூட்டு சிரிப்பினை உள்ளடக்கியது அந்தப் பூக்கூட்டம்.
பூக்கும் தாவரங்களில் (angiosperms) உள்ள ஒரு பூவின் பரிணாம வடிவமைப்பை பார்த்துவிடலாமா இப்பொழுது. ஒரு பூக்காம்பு ஒரு மொட்டை யாருக்கோ தான் பரிசளிக்கவிருக்கும் பெட்டியினை சுமந்து நிற்பதாக தன்னுடைய புல்லிவட்ட புற இதழ்களைக் (sepal) கொண்டு உள்ளே இருக்கும் பரிசினை பாதுக்காக்கிறது. இது சற்று தடிமனான இலைகளைப் போல் தோன்றும், அதன் முக்கிய பயன் மலர்வதற்கு முன்னாக அந்த மலரை பொத்தி பாதுகாப்பளிப்பது.
இப்பொழுது அந்த மொட்டு மெல்ல அவிழ்கிறது. வண்ணம் வெடிக்கிறது. புறவயமாக இந்த பூமிக்கு அழகூட்டும் அல்லிவட்டம் (petal) மலர்களின் இனங்களுக்கு தகுந்தாற் போல பல நிறங்களைக் கொண்டு விரிவடைகிறது. ஒவ்வொரு மலரும் தனக்குள்ளேயே ஒரு உலகத்தை உள்ளடக்கியே எழுந்து நிற்கிறது.
ஒரு மலருக்குள் ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்புகளை உள்ளடக்கியிருந்தால் அதனை ஒரு முழு பூவாகவும், அப்படி அன்றி பெண் இனப்பெருக்க விசயங்கள் ஒரு பூவிலும், ஆண் விசயங்கள் மற்றொரு பூவிலும் அமைந்திருந்தால் அது முழுமையற்ற பூவாகவும் கருதிக் கொள்வோம்.
எப்படியாகினும் இவைகளை இணைத்து வைப்பது என்னவோ புறக்காரணிதான் என்பதனை ஞாபகத்தில் நிறுத்திக் கொள்வோம் (அது காற்றாகவோ, நீராகவோ, பூச்சி/பறவை இத்தியாதி விசயங்களாகத் தானிருக்கும்).
பெண் இனப்பெருக்க
பாகங்கள்:
இப்பொழுது அல்லிவட்டத்தை (petal) தொடாமல் உள்ளே பார்வையை செலுத்தினால் நடுநயமாக பூக்களுக்கான ராணியைப் போல ஒரு தண்டு நின்று கொண்டிருக்கும். சற்றே ஒரு பேரிளம் பெண்ணை ஒற்ற தசைப் பிடிப்புடன். அந்த ராணியின் பெயர் சூல்வித்திலை (carpel). இந்த ராணி மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த அமைப்பை ஒரு வீணையாக மனதில் நிறுத்திக் கொள்வோம். அந்த வீணையை தூக்கி நிறுத்தினால் அதன் குடுவை அமைப்பு கீழ் நோக்கி இருக்கும், அல்லவா?
அந்த வீணை அமைப்பின் முகப்பில் சூலகமுடி (stigma) இருக்கிறது. அதன் கீழாக நீண்டு ஓடும் வீணையின் கழுத்துப்பகுதிக்கு பெயர் சூலகத்தண்டு (style). இவைகள் இரண்டையும் உள்வாங்கியபடி இருக்கும் வீணையின் குடுவைப்பகுதியினை சூலகம் (ovary) எனக் கொள்க. அதனை ஊடுருவி பார்த்தால் அதனுள் பொதிக்கப்பற்றிருக்கிறது, பெண் சூல் முட்டை (ovule).
ஆண் பகுதி:
இப்பொழுது அந்த ராணியைச் சுற்றியும் நிறைய கலங்கரை விளக்கங்களைப் போல எழுந்து நிற்கும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. அந்த ராணியை சுற்றிலும் அண்ணார்ந்து பார்த்தபடியோ, அல்லது குனிந்து பார்த்த படியோ மிக அருகாமையில் நின்று கவரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மொத்த கலங்கரை விளக்கத்தினை Stamen என்று கொள்வோம்.
இது இரண்டு பகுதிகளாக உள்ளது. நீண்ட தண்டு (மகரந்த கம்பி-filament) அதன் நுனியில் பல மகரந்ததூள்களை கொண்ட மகரந்த பை (anther). இங்கிருந்தே மகரந்த தூள்கள் புறக்காரணிகளைக் கொண்டு பெண்ணின் பிசுபிசுப்புடன் அமைந்துப்பட்டிருக்கிற சூலகமுடிகளுக்கு ஆணின் மகரந்த தூள்களை கொண்டு சேர்க்கின்றன.
மெதுவாக அந்த மகரந்தத் தூள், சூலகத்தண்டின் வழியாக சில வேதிய மாற்றங்களைப் பெற்றபடியே சூலகத்திற்கு சென்றடைகிறது. அங்கே தனக்காக காத்திருக்கும் சூல் முட்டையுடன் பற்றிப்படறி, இரண்டற கலந்து அடுத்த தலைமுறையை மரபணு பரிவர்த்தனை மூலமாக சாதித்துக் கொள்கிறது. சூல்கொண்டவுடன், அந்த வீணையின் புற அமைப்பு அதாவது சூலகம் நாம் உண்ணும் பழப்பகுதியாகவும், உள்ளமைப்பு விதையாகவும் ஆகிவிடுகிறது.
இப்பொழுது நாம் முழுமையாக ஒரு மலரின் அமைப்பினையும் அது எப்படி சூல் கொள்கிறது என்றும் பார்த்தாகிவிட்டது.
இதில் புதிதாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதனை இங்கு வைத்து தைத்து விடுகிறேன். இயற்கையமைவில் பார்த்தால் ஆண்/பெண் பாலின விகிதாச்சாரம் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே போல அமைந்து விடுவது கிடையாது. இயற்கையின் தேர்ந்தெடுப்பதில் எப்பொழுதும் ஆண் போராடியே தனது மரபணு சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கட்டாயத்தில் வைக்கப்படுவதாக அறிய முடிகிறது.
அதற்கு உதாரணமாக அனைத்து உயிரினங்களின் ஆண்/பெண் புறத் தோற்றத்திற்கென அமைந்த வண்ண வண்ண ஜிகர்தண்டா வேலைகளை வைத்துப் பார்த்தாலே தெரியும். இதனில் குறிப்பாக பறவைகளில் ஆண் சற்றே தூக்கலான நிறங்களையும், குரல் வளத்தையும் பெற்று தனக்கு போட்டியான மற்றொரு ஆண் பறவையிலிருந்து பெண்ணின் பார்வையை தன்னிடத்தே கவர்ந்து வெற்றி கொள்ளும் கட்டாயத்திலிருக்கிறது.
போலவே, விலங்குகளில் எது அதிகமான போராட்டத் திறனையும், உடல் வலிமையையும் பெற்றிருக்கிறதோ அது அதிகப்படியான பெண்களை பெற்றுக் கொள்கிறது. இதனில் கூர்ந்து கவனித்தால் அது மலர்களிளாகட்டும், விலங்குகளிளாகட்டும் பெண் நடுநயமாக நின்று தன்னுடைய சுட்டு விரல் அசைப்பில் தனக்கு எது போன்ற திறனைக் கொண்ட, வலிமை மிக்க வாரிசை அடைந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கும் பீடத்தில் அமர்ந்திருப்பதாக இருக்கும்.
என்னுடைய சிந்தனை இந்த அடிப்படையின் புரிதலோடு இந்த மலர்களின் இனப்பெருக்க அமைப்பை காண தலைப்பட்டது. எப்படியெனில், ஒரே ஒரு சூல்வித்திலை சுற்றிலும் ஏன் அத்தனை ஆண் இனப்பெருக்க ஸ்டேமெனை நிறுத்தி வைத்திருக்கிறது? இது இனவிருத்தி செய்யும் வாய்ப்பை அதிகரிக்கவே அப்படியான ஓர் இயற்கையமைவு என்றாலும், எப்படி ஆஃப்ரிகா சமவெளிகளில் இன்றளவும் விலங்குகளிடத்தில் போட்டியின் அடிப்படையில் இயற்கை தேர்ந்தெடுப்பு நடைபெறுகிறதோ அதனே இந்த ஒரு மலர் உலகத்திலும் நடைபெறுகிறது.
இங்கே ஒரு திருகல், ஒரு சூல்வித்திலையை சுற்றிலும் நிற்கும் அந்த ஸ்டெமென்களை பார்க்கும் பொழுது, நம் உலகில் ஆண்களின் இயல்பான பெண்களைக் கண்டதும் நடைபெறும் தலை திரும்பல்களுக்கான பரிணாமப் புரிதலை உள்ளடக்கியிருக்கிறதாகப் படுகிறது :) ... இது ஒரு மனித ஆணின் தவறல்ல பரிணாம உயிரிய நிரலிப் பரப்பல். முயன்று சிறந்த மரபணுக்களை அடுத்த பரிணாமச் சக்கரத்தில் ஏற்றி வைக்க இயற்கை அமைத்து வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு.





சிறப்பாக ஆய்வு செய்துள்ளார்.
பதிலளிநீக்கு